மியன்மாரில் பௌத்த மடாலயம் மீது வான்வழி குண்டு தாக்குதலில் 23 பேர் பலி!
மியான்மரில் உள்ள பௌத்த மடாலயம் மீது மியன்மார் விமானப்படை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்துள்ள பௌத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மியன்மாரின் சாகிங் பிராந்தியத்தின் சாகிங் டவுன்ஷிப்பில் உள்ள லிண்டலு கிராமத்தில் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு அடைக்கலம் கொடுத்த மடாலயத்தின் மீது மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு வான்வழியாக குண்டுகளை வீசியுள்ளது.
சகாயிங் மாகாணத்தில் உள்நாட்டு கிளர்ச்சிப்படைக்கும் மியான்மர் இராணுவத்துக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக மோதல்கள் அதிகரித்துள்ளன.
இருதரப்புக்கும் இடையில் நடைபெறும் மோதல்களிலிருந்து தப்பித்து மடத்தில் தஞ்சமடைந்திருந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இரவு உறங்கிக்கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கவிழ்த்து, இராணுவத்தின் ஆட்சி அமைக்கப்பட்டது முதல் மியான்மரில் உள்நாட்டு மோதல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.