கனடாவில் தாம் உயிருடன் இருப்பதை நிரூபிக்க போராடும் பெண்
கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஊரானியா “நியா” டஸ்கலோப்போலஸ் என்ற பெண் தான் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக போராடி வருகிறார் என்ற வினோத செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பெண்ணின் ஆவணங்கள் அனைத்தும் உயிரிழந்த ஒரு நபர் தொடர்பிலான ஆவணங்களாக மாற்றப்பட்டுள்ளது.
தற்பொழுது குறித்த பெண் தாம் உயிருடன் இருப்பதாக வெளிப்படுத்துவதற்காக கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் அவரே இந்த குழந்தையின் ஏக பராமரிப்பாளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 12ஆம் திகதி ஊரானியாவின் தந்தை காலமாகியுள்ளார்.
காப்புறுதியை நிறுவனம் ஆள் அடையாளத்தை மாற்றி குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக ஆவணங்களில் பதிவு செய்து கடிதம் அனுப்பியதாகவும் அதன் ஊடாகவே இதனை அறிந்து கொண்டதாக ஊரானியா தெரிவிக்கின்றார்.
தனது தந்தை உயிரிழந்து விட்ட காரணத்தினால் ஆவணங்களை மாற்றுவதற்காக விடுத்த கோரிக்கை அமைய தகவல்கள் மாற்றிப் படவில்லை என குறித்த பெண் தெரிவிக்கின்றார்.
குறித்த பெண்ணின் வாகனத்தின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சுகாதார காப்பீடு அட்டை, கடவுச்சீட்டு, வருமான வரி உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்திலும் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.
மரண சடங்கை மேற்கொண்ட மலர்சாலையில் உயிரிழந்தவரின் ஓட்டுனர் உரிம இலக்கத்திற்கு பதிலாக தவறுதலாக குறித்த பெண்ணின் ஓட்டுனர் உரிம இலக்கத்தை வழங்கியதனால் இந்த குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மலர்சாலையினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஏனைய ஆவணங்களில் குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மலர்ச்சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாம் வெளிநாடு ஒன்று பயணம் செய்து நாடு திரும்பி இருந்தால் கடவுச்சீட்டை காண்பித்து நாட்டுக்குள் வந்திருக்க முடியாது என அவர் குறிப்பிடுகின்றார்.
ஏனெனில் குடிவரவுத் துறையினர் தான் ஜூலை மாதம் உயிரிழந்து விட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது என கூறி இருப்பார்கள் என தெரிவிக்கின்றார்.
தந்தையின் மறைவுக்குப் பின் நிர்வாக பிழையால் உயிருடன் இருந்தும் ‘இறந்தவர்’ எனப் பதிவான இந்தச் சம்பவம், கியூபெக் மாகாணத்தின் அரசு ஆவண முகாமைத்துவத்தின் குறைபாடு குறித்து கேள்விகள் எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.