அமெரிக்கா பிரவேசிக்கும் கனடியர்களை புகைப்படம் எடுக்கும் புதிய திட்டம்
அமெரிக்கா பிரவேசிக்கும் கனடியர்களை புகைப்படம் எடுக்கும் புதிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் அண்மைய நாட்களாக கடுமையான முரண்பாட்டு நிலைமைகள் காணப்படுகின்றன.
வர்த்தக ரீதியான போராட்டங்கள் கடுமையான நிலையை அடைந்துள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கும் கனடியர்கள் எல்லை பகுதிகளில் வைத்து புகைப்படம் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் டொரன்டோவின் பிரபல மனநல நிபுணர் வாரன் ஷெபெல் அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது சீருடை அணிந்த அமெரிக்க அதிகாரிகள் அவரை புகைப்படம் எடுத்தனர் என தெரிவித்துள்ளார்.
விமானம், கடல் மற்றும் தரைவழி போக்குவரத்து ஊடாக அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கும் கனேடியர்களின் முகங்கள் படம் எடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனம் ஏற்கனவே பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயணிகளின் முகத்தை சரி பார்க்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
குறிப்பாக பயணிகளின் கதவு சீட்டுடன் அவர்களது முகத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் முறை ஆகும்.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் முழுமையான அளவில் அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்க பிரஜைகள் அல்லாத கனடியர்கள் உள்ளிட்ட ஏனைய அனைத்து வெளிநாட்டு பிரஜைகளின் முகப் படங்களும் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் இவ்வாறு அமெரிக்க அதிகாரிகள் பயணிகளை புகைப்படம் எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த நடவடிக்கையானது மக்களின் தனியுரிமையை பாதிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.