ரூ.2,684 கோடி மோசடி குற்றச்சாட்டு ; அனில் அம்பானி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
போலியான தகவல்களை வழங்கி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி.யிடம் இருந்து ரூ.2,684.57 கோடி முதலீட்டை பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) வழக்குப்பதிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் 2012 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஐந்து கடன் பத்திரங்களை வெளியிட்டிருந்தது.
அவற்றில் எல்.ஐ.சி. சுமார் ரூ.3,900 கோடியை முதலீடு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறுவனத்தின் பொது நிதித் தேவைகள், வர்த்தகத் தேவைகள் மற்றும் ஏற்கனவே இருந்த கடன்களை குறைப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த முதலீடுகள் திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், தவறான தகவல்களை வழங்கி எல்.ஐ.சி.யை முதலீடு செய்யத் தூண்டியதாகவும், பின்னர் அந்த நிதி முறைகேடான வழிகளில் வேறு நோக்கங்களுக்காகத் திருப்பி விடப்பட்டதாகவும் எல்.ஐ.சி. தனது புகாரில் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன் காரணமாக எல்.ஐ.சி.க்கு ரூ.2,684.57 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அதே அளவுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சட்டவிரோத ஆதாயம் கிடைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்படும் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் எல்.ஐ.சி. ஆகியவை அளித்த புகார்களின் அடிப்படையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ. எட்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் ஆறு வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரணையில் உள்ளதுடன், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பிலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.