தாய்லாந்து மதுபானக் கடையில் பயங்கர தீ விபத்தில் 27 பேர் பலி
தாய்லாந்தின் பேங்காக் நகரில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு கடந்த பின்னர் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், கட்டடம் முழுவதும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டதாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சுமார் அரை மணி நேரப் போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கிருந்த வாடிக்கையாளர்கள் கட்டடத்தின் பிரதான வாயில் வழியாக அலறியடித்துக்கொண்டு வெளியேற முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்த 27 பேரின் எண்ணிக்கையை தாய்லாந்து பிரதமர் அனுடின் சான்விராகுல் உறுதிப்படுத்தியுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், அது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சம்பவம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்துக்குப் பின்னர் சிலரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.