யேமனில் 281,000 மக்கள் இடம்பெயர்வு
யேமனில் 281,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்து ஏமனில் இடம்பெறும் சண்டையே இந்த இடம்பெயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு விசுவாசமான படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
தைஸ் நகரை தெற்கு மாகாணங்களுடன் இணைக்கும் முக்கிய வீதி சேதமடைந்ததால், கடந்த மூன்று வாரங்களாக மனிதாபிமான உதவிகள் கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது என்று OCHA கூறியது.
தற்போது, உதவிப் பொருட்கள் குறுகிய மலைப் பாதைகள் வழியாகவே தேவைப்படும் மக்களைச் சென்றடைய வேண்டியுள்ளது. பொதுமக்களையோ அல்லது உதவிப் பொருட்கள் செல்லும் வாகனங்களையோ குறிவைக்க வேண்டாம் என்று போராளிகளுக்கு OCHA அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்துத் தரப்பினரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மதிக்க வேண்டும். மேலும், தேவைப்படும் மக்களுக்கு உதவிகள் சென்றடைய, பாதுகாப்பான, தொடர்ச்சியான மற்றும் தடையற்ற மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை அனுமதிக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது