எரிபொருள் செலவு பல மடங்கு உயர்வு ; கம்போடியாவில் முடங்கிய அமெரிக்க சொகுசுக் கப்பல்
எரிபொருள் விலை உயர்வு காரணமாக, மூன்றரை ஆண்டுகள் உலகைச் சுற்றும் வகையில் திட்டமிடப்பட்ட அமெரிக்க சொகுசுக் கப்பலின் பயணம் கம்போடியாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கப்பலில் பயணித்த 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ‘வில்லா வி ரெசிடன்சஸ்’ நிறுவனம், ‘எம்.வி. ஒடிஸி’ என்ற சொகுசுக் கப்பலை இயக்கி வந்தது. இந்தக் கப்பலில் நிரந்தரமாகத் தங்கி, உலகின் ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்யும் வகையில் திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டது.

கப்பலில் ஒரு அறைக்கான ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.18 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த 2024ஆம் ஆண்டு ஒக்டோபரில் வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் துறைமுகத்திலிருந்து கப்பல் தனது உலகச் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தது.
மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் காரணமாக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, கப்பலில் ஒரு அறைக்கான சராசரி மாதாந்த எரிபொருள் செலவு முன்னர் சுமார் 1,800 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், தற்போது 6,000 முதல் 8,000 டொலர் வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்பாராத வகையில் ஏற்பட்ட இந்த நிதிச் சுமையைச் சமாளிக்க முடியாததால், உலகச் சுற்றுப்பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான மாற்றுத் தங்குமிடங்களை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், கப்பலிலிருந்து வெளியேறுவதற்கு செவ்வாய்க்கிழமை வெறும் ஏழு மணி நேர அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டதாகப் பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன், தங்களுக்கு முறையான உதவிகளோ இழப்பீடுகளோ வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், உலகச் சுற்றுப்பயணத்தை எதிர்பார்த்துச் சென்ற பயணிகள் இடைநடுவில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது ‘எம்.வி. ஒடிஸி’ சொகுசுக் கப்பல் கம்போடியாவின் சிஹானோக்வில் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கம்போடிய அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, கப்பலில் பெரும்பாலான அமெரிக்கர்கள் உட்பட 203 பயணிகளும் 156 பணியாளர்களும் உள்ளனர்.
எரிபொருள் செலவு அதிகரிப்பு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள இந்தப் பயணத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், பயணிகளின் தங்குமிடம் மற்றும் அவர்களுக்கான உதவிகள் தொடர்பான நிலைமை கவனத்தைப் பெற்றுள்ளது.