சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் 3 புதிய விதி முறைகள்!
சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று புதிய விதி முறைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அவற்றில் ஒனறு ஸ்டாப் கிளாக் என்ற புதிய விதிமுறை பந்துவீசும் அணிக்கும், பவுலர்களுக்கும் புதிய நெருக்கடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாப் கிளாக் விதிமுறை என்ன? அதனால் பந்துவீசும் அணிக்கு என்ன நெருக்கடி? மற்ற இரு விதிகள் என்ன? சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹேவுக்கு என்ன பிரச்னை? இந்த 3 விதிகளும் எப்போது முதல் அமலுக்கு வரும்?
இதுதொடர்பில் விரிவாகப் பார்க்கலாம்,
ஸ்டாப் கிளாக் விதிமுறை:
சர்வதேச கிரிக்கெட் பேரவை நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 21ஆம் திகதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது.
அதில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பந்துவீச்சும் அணி ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே பந்துவீச மூன்றாவது முறையாக 60 விநாடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக்கொண்டால் 5 ஓட்டங்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு டிசம்பர் முதல் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சோதனை முயற்சியாக இந்த விதிகள் பின்பற்றப்படும் என்று ICC தெரிவித்துள்ளது.
இது விளையாட்டின் வேகத்தையும் பார்வையாளர்களின் அனுபவத்தையும் மேம்படுத்துவதற்கான பரந்துபட்ட முயற்சியின் ஒரு பகுதி என்றும் கூறுகிறது.
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக் விதிமுறை சோதனை அடிப்படையில் புதிய விதியை கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது.
சம ஊதியம், திருநங்கைகளுக்கு தடை
அடுத்ததாக, கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்திற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பெண் அதிகாரிகளும் சம ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டிருக்கிறது.
ஆடவர் போட்டியோ, மகளிர் போட்டியோ நடுவர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியுள்ளது.
இறுதியாக, ஆண்களாக பிறந்து பெண்களாக மாறிய திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
ஆண் எந்த அறுவை சிகிச்சை அல்லது பாலின மறுசீரமைப்பு சிகிச்சையை மேற்கொண்டிருந்தாலும், சர்வதேச பெண்கள் விளையாட்டில் பங்கேற்க தகுதி பெற மாட்டார்கள் என சர்வதேச கிரிக்கெட் பேரவை கூறியிருக்கிறது.