உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர் ; காஸாவை வாட்டும் கடும் பஞ்சம்
காஸாவில் உணவு மற்றும் சுகாதாரமான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. காஸாவுக்கு நட்பு நாடுகள் கொடுக்கும் மனிதாபிமான உதவிகளை எல்லைப் பகுதிகளிலேயே இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருகிறது.
உணவு தட்டுப்பாடு
இதனால், காஸாவிலுள்ள மக்களுக்கு போதிய உணவு, குடிநீர், மருந்துகள் போன்ற அடிப்படை பொருள்கள் சென்று சேர்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே, காஸாவில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடால் குடிமக்கள் மட்டுமின்றி அங்கு பணிபுரியும் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஸாவில் பணிபுரிந்துவரும் புகைப்பட பத்திரிகையாளர் முகம்மது அபு வோன் லிங்க்டுஇன் சமூக வலைதளப் பக்கத்தில் உணவுக்காக தனது புகைப்படக் கருவியையும், பாதுகாப்பு உபகரணத்தையும் விற்பனைக்கு அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் காஸாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர். நான் எனது உபகரணங்களையும் பாதுகாப்பு கவசத்தையும் வழங்க விரும்புகிறேன். அதன்மூலம் எனக்கும் எனது குடும்பத்துக்குமான உணவை என்னால் வாங்க முடியும் எனப் பதிவிட்டுள்ளார்.