இங்கிலாந்தில் 30 புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
இங்கிலாந்தில் உள்ள தடுப்புக் காவல் நிலையம் ஒன்றில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 30 புகலிடக் கோரிக்கையாளர்கள், அவர்களைப் பிரான்சுக்குத் திருப்பியனுப்பும் தொழிலாளர் (Labour) அரசாங்கத்தின் புதிய கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
One-in, One-out நாடுகடத்தல் திட்டம்
இந்த உண்ணாவிரதம், பிரிட்டன் அரசின் சர்ச்சைக்குரிய ‘ஒருவர் உள்ளே, ஒருவர் வெளியே’ (One-in, One-out) என்ற நாடுகடத்தல் திட்டத்திற்கு எதிராக வெடித்துள்ளது.

பிரதமர் கீத் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம், சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக நுழையும் அகதிகளைத் தடுக்க, இந்தப் புதிய பரஸ்பர நாடுகடத்தல் திட்டத்தை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் கொண்டுவந்தது.
அந்த ஒப்பந்தத்தின்படி, சிறிய படகுகளில் இங்கிலாந்துக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களைப் பிரான்சுக்குத் திருப்பியனுப்பலாம்.
அதற்கு ஈடாக, பிரான்சில் சட்டரீதியான முறைகளில் தஞ்சம் கோரும் அதே எண்ணிக்கையிலான நபர்களை இங்கிலாந்து தனது நாட்டிற்குள் ஏற்கும் சட்டவிரோதக் குடியேற்றத்தை ஊக்கப்படுத்துபவர்களின் வணிக மாதிரியை உடைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்று அரசு கூறுகிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 30 பேரும், இந்தக் கொள்கையின்கீழ் எதிர்வரும் நாட்களில் பிரான்சுக்குச் சிறப்பு விமானம் மூலம் பலவந்தமாக நாடுகடத்தப்பட இருந்த நிலையில், அவர்கள் உண்ணா விரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கை தங்களை “மனிதத்தன்மையற்ற” முறையில் நடத்துவதாகவும், இது 1951 ஆம் ஆண்டு ஐ.நா. அகதிகள் மாநாட்டின் (1951 Refugee Convention) விதிகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
தாங்கள் சிறிது நேரம் மட்டுமே கடந்து வந்த பிரான்ஸ் அல்லது தங்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவது பாதுகாப்பற்றது என்றும், தங்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இங்கிலாந்து உள்துறை அலுவலகம், இந்த ஆண்டு இதுவரை சுமார் 50,000-க்கும் அதிகமான, நாட்டில் இருக்க உரிமை இல்லாதவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும், நாடுகடத்தல் செயல்முறைகள் அனைத்தும் ‘மாண்புடனும் மரியாதையுடனும்’ நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது