என் தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் ; இம்ரான்கான் மகனால் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து, அவரது மகன் காசிம் கான் தனது தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தையும், அவரை விடுவிக்குமாறும் கோரி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
காசிம் கான் 'எக்ஸ்' தளத்தில் இட்ட பதிவில், தனது தந்தை கடந்த ஆறு வாரங்களாக மரண சிறையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவு இருந்தும் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

மனிதாபிமானமற்ற தனிமைப்படுத்தல்
இது மனிதாபிமானமற்ற தனிமைப்படுத்தல் என்றும், இம்ரான் கானின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் அரசே முழுப் பொறுப்பு என்றும் அவர் எச்சரித்தார். மேலும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் தலையிடவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கிடையில், அடிலா சிறை நிர்வாகம், இம்ரான் கானின் உடல்நிலை குறித்த வதந்திகளை மறுத்தது.
அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தேவையான அனைத்து பராமரிப்புகளும் வழங்கப்படுவதாகவும் சிறை நிர்வாகம் உறுதி அளித்தது. ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ள இம்ரான் கான், தனது மீதான வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறி வருகிறார்.