டொராண்டோவில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது
ரொராண்டோவின் ப்ராட்வியூ அவென்யூ மற்றும் ஜெரார்ட் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதிகளில் பல வீடுகளில் புகுந்து திருட்டுச் சம்பவங்களை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி காலை 3 மணியளவில், முதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர், வீட்டின் பின்புற கதவை திறந்து உள்ளே புகுந்து, குடியிருந்த ஒருவரை கத்தியால் மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் எந்த பொருளையும் கொள்ளையடிக்காமல் தப்பிச்சென்றுள்ளார். குறித்த சந்தேகநபர் மேலும் மூன்று சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் ஒரு வீட்டின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியதாகவும், பிறகு இன்னொரு வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளையடித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் மற்றுமொரு வீட்டில் அச்சுறுத்தும் செய்தி கொண்ட ஒரு குறிப்பு எழுதி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
30 வயதுடைய ஈயன் டிக்சன் (Eian Dickson) என்பவர், கொள்ளை, மிரட்டல், உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.