காசாவில் 37 சர்வதேச மனிதாபிமான உதவி நிறுவனங்களுக்குத் தடை; பட்டினியால் மக்கள் தவிக்கும் அபாயம்
காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பணியாற்றி வரும் 37 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்யப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த முடிவுக்கு பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட 10 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மக்கள் அத்தியாவசிய உதவிகளின்றி தவிக்கும் நிலை
புதிய பதிவு விதிமுறைகளை இந்த நிறுவனங்கள் பின்பற்றத் தவறிவிட்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
அதன்படி, நாளை (ஜனவரி 1) முதல் இந்த நிறுவனங்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்படும் என்றும், அடுத்த 60 நாட்களுக்குள் அவை தமது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் ActionAid, International Rescue Committee, Norwegian Refugee Council, CARE மற்றும் Medical Aid for Palestinians போன்ற உலகப் புகழ்பெற்ற மனிதாபிமான அமைப்புகளும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த உதவி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் முழுமையான தனிப்பட்ட விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
அதேசமயம் மனிதாபிமான அமைப்புகளுக்குள் பயங்கரவாதக் குழுக்கள் ஊடுருவுவதைத் தடுக்கவே இந்தத் தகவல்கள் கோரப்பட்டதாக இஸ்ரேலிய புலம்பெயர்ந்தோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மனிதாபிமான உதவி வரவேற்கத்தக்கது, ஆனால் மனிதாபிமானக் கட்டமைப்புகளைப் பயங்கரவாதத்துக்காகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது" என இஸ்ரேலிய அமைச்சர் அமிச்சாய் சிக்லி (Amichai Chikli) தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாலஸ்தீனப் பகுதிகளில் பணியாற்றும் மனிதாபிமானக் குழுக்களின் கூட்டமைப்பு, இஸ்ரேலின் புதிய பதிவு முறை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளது.
இந்த நிறுவனங்களே காசாவில் உள்ள பெரும்பாலான கள மருத்துவமனைகள், நீர் மற்றும் சுகாதார சேவைகள் மற்றும் ஊட்டச்சத்து மையங்களை நிர்வகித்து வருகின்றன.
இந்தத் தடையால் இலட்சக்கணக்கான மக்கள் அத்தியாவசிய உதவிகளின்றி தவிக்கும் நிலை ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், இந்தத் தடையால் உதவி விநியோகம் பாதிக்கப்படாது என்றும், ஐநா அமைப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிற வழிகள் மூலம் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.