கனடாவில் சைபர் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது
கனடாவின் கல்கரியில் சைபர் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் கடன் நிறுவனம் வாடிக்கையாளர்களை குறிவைத்து ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் மூலம் தொந்தரவு செய்ததாக க்யூபெக் மாநிலத்தைச் சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளனர்.
ஒரே நாளில் ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்ததால் பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசி இணைப்புகள் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022 டிசம்பரில் Sonic Cash 500 என்ற ஆன்லைன் கடன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவர் இந்தத் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர், இன்னும் ஐந்து பேரும் இதேபோன்ற தாக்குதலுக்கு உள்ளானது தெரியவந்தது. பாதிப்படைந்தவர்களில் ஒருவரின் குடும்பம், நண்பர்கள், வேலை இடம், கல்கரி ஷாப்பிங் மால், மற்றும் மருத்துவ சோதனை மையம் போன்ற இடங்களும் தொந்தரவுக்கு உள்ளாகின.
2024 பிப்ரவரியில், லாவல் மற்றும் மொன்ட்ரியல் பகுதிகளில் உள்ள ஐந்து இடங்களில் பொலிஸார் சோதனை நடத்தியபோது, ஆயிரக்கணக்கான ஆவணங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் மூலம் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மிரட்டல் மற்றும் தொந்தரவு அழைப்புக்களை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.