டொமினிக்கன் குடியரசில் கொலைக் குற்றச்சாட்டில் 11 பொலிஸ் அதிகாரிகள் கைது
டொமினிக்கன் குடியரசில் பதினொரு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாகவும் கொலைக் குற்றச்சாட்டில் இந்த அதிகாரிகள் கைதானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாண்டியாகோ டெ லோஸ் கபல்லேரோஸ் நகரில் கடந்த மாதம் நடந்த பொலிஸ் நடவடிக்கையில் ஐந்து சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
செப்டம்பர் 10 அன்று இடம்பெற்ற மோதலில் பொலிஸார் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்தக் கொலை
கொல்லப்பட்டவர்கள் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், மற்றும் ஒப்பந்தக் கொலைகளில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சமூகத்தில் பிரபலமான சிகை அலங்காரக் கலைஞர் என்பதையும் சுட்டிக்காட்டினர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு போலீஸ் கேப்டன் மற்றும் இரண்டு சார்ஜெண்ட்கள் அடங்குவர் என்பதுடன், இதுவரை யாருக்கும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.
இந்தச் சம்பவம் பொதுமக்கள் போராட்டத்தையும், மனித உரிமை அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டொமினிகன் மனித உரிமைகள் ஆணையத்தின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் இதுவரை 150க்கும் மேற்பட்ட சட்டவிரோத போலீஸ் கொலைகள் நடந்துள்ளன.
இது 2024இல் பதிவான 80 சம்பவங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.