ஹாலோவீன் சாக்லேட் சாப்பிட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதி: கியூபெக்கில் தாய் எச்சரிக்கை
ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது பெற்ற சாக்லேட்டை சாப்பிட்ட 4 வயது சிறுவன் ஒருவர், அதில் கஞ்சா கலக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கியூபெக் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அச்சிறுவனின் சிற்றன்னையான ரெபெக்கா லெஃபெவ்ரே மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமையன்று 4 வயதான மைலான் தான் சாப்பிட்ட சாக்லேட் விசித்திரமான சுவையுடன் இருப்பதாகக் கூறியதுடன், உமிழ்நீரும் அதிகளவில் வடிந்துள்ளது.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக ரெபெக்கா தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் சிறுவன் நலமாக இருப்பதாகக் கூறி செவிலியர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது சிறுவன் திடீரென தரையில் விழுந்து அழத் தொடங்கியுள்ளார். அவரது இதயத் துடிப்பும் மிக வேகமாக அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், கஞ்சாவில் போதையை உண்டாக்கும் ரீ.எச்.சீ என்ற இரசாயனப் பொருள் சிறுவனின் உடலில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
இத்தகைய சம்பவங்கள் நடந்திருக்கக் கூடாது. அந்த தருணத்தில் பயம், மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தால் நாங்கள் உறைந்துபோனோம் என ரெபெக்கா வேதனையுடன் கூறியுள்ளார்.
ஹாலோவீன் சாக்லேட்டுகளைத் தன் குழந்தைக்குக் கொடுப்பதற்கு முன் தான் பரிசோதித்ததாகவும், அதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இச்சம்பவம் தொடர்பாக கியூபெக் மாகாண பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு சமூக வலைதளங்களில் ரெபெக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சில நபர்கள் பெற்றோரையே குறை கூறி எதிர்மறையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.