கனடா கடற்பகுதியில் படகு மூழ்கி விபத்து: 6 பேரைக் காணவில்லை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணக் கடற்பகுதியில் சுற்றுலாப் பயணியர் படகு (Charter boat) ஒன்று மூழ்கி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் அவசரகால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ரிச்மண்ட் நகருக்கு அருகே உள்ள ராபர்ட்ஸ் பேங்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11:45 மணியளவில், 10 பேருடன் பயணித்த அந்தப் படகிற்குள் திடீரென நீர் புகுந்துள்ளது.
விபத்தில் சிக்கியவர்களில் 4 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சீ ஐலேண்ட் கடலோரக் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் உடல்நிலை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எஞ்சிய 6 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை இரவு 7:45 மணி வரை அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றதாக கனடிய காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான பகுதி வழியாகச் சென்ற மற்றொரு பொதுமக்கள் பயன்பாட்டுப் படகில் இருந்தவர்கள் தான் இந்த விபத்தைக் கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும், "கடல் நீரில் மிதக்கும் பாதுகாப்பு உடைகள் ஏதுமின்றிப் பல மனிதர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றும் அவர்கள் அவசரக்கால பிரிவிற்குத் தகவல் அனுப்பியுள்ளனர்.
தகவல் கிடைத்தவுடன் விக்டோரியாவின் கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் பாரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தத் தேடுதல் பணியில் பின்வரும் குழுக்களும் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.