அரிய வகை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது ஆண் குழந்தை!
இந்தியா - மேற்கு வங்காளத்தில் ஏவியன் இன்புளுயன்சா ஏ (எச்9என்2) என்ற வைரஸால் ஏற்படக்கூடிய அரிய வகை பறவைக் காய்ச்சல் 4 வயது ஆண் குழந்தையை பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரிதாக காணப்படும் இந்த வகை வைரஸ் இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 2-வது பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
பாதிக்கப்பட்ட குழந்தை கடந்த பெப்ரவரி மாதம் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான காய்ச்சலால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனையில், எச்9என்2 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை தேறியதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வைரஸ் குழந்தையின் வீட்டுக்கு அருகில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து தாக்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.