பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஊடுருவல் ; 41 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு
பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றதாகக் கூறப்படும் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான நூரிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையின்போது, ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 41 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பாகிஸ்தானின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எவரையும் அனுமதிக்கப் போவதில்லை எனவும், இதுபோன்ற எல்லை மீறல்கள் தொடருமானால் கடுமையான பதிலடி வழங்கப்படும் எனவும் ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, ஆயுதமேந்திய நபர்கள் எல்லை தாண்டி ஊடுருவியதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் உயரதிகாரியை நேரில் அழைத்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், அவரிடம் கண்டனக் கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாகிஸ்தான் இதுவரை உடனடியாக எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.
இதற்கு முன்னரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதேவேளை, பாகிஸ்தானில் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் வழங்குவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தான் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.