நியூயோர்க் செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பாலஸ்தீனிய பெண்
அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பாலஸ்தீனியர் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை 34 வயதான அபெர் கவாஸ் படைத்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 03 ஆம் திகதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில், வடமேற்கு குயின்ஸில் உள்ள 12-வது மாவட்டத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஹான் கோன் டோவை எதிர்த்து 74.5 சதவீத வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார்.

இந்தப் பகுதியில் வசிப்பவர்களில் சுமார் 50 சதவீதமானோர் அமெரிக்காவிற்கு வெளியே பிறந்தவர்கள் ஆவர்.
அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள்' (DSA) மற்றும் நியூயோர்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி ஆகியோரின் ஆதரவுடன் களமிறங்கிய கவாஸ், பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு, குறைந்த விலை வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகியவற்றை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தமை குறிப்பிடதக்கதாகும்.
கவாஸின் பெற்றோர் பாலஸ்தீனத்தில் நடந்த மக்கள் வெளியேற்றங்களின் போது தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள். அவரது தந்தை 1948-லும், தாயார் 1967-லும் வெளியேற்றப்பட்டனர். ஜோர்டானில் அண்டை வீட்டாராக வளர்ந்த அவர்கள், காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, 1990-களில் தங்கள் கைக்குழந்தையான மகனுடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தனர்.
பின்னர் அவர்களுக்கு மூன்று மகள்கள் பிறந்தனர். நான்கு குழந்தைகளில் மூன்றாவதாக, இரண்டு சகோதரிகளுக்கு இடையே அபெர் பிறந்தார். சிறுவயதில் தனது தந்தை குடிவரவுத் துறையால் தடுத்து வைக்கப்பட்ட சம்பவமே தன்னைச் சமூகப் பணிகளிலும் அரசியலிலும் ஈடுபடத் தூண்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் அடுத்த இலக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு நியூயார்க் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் நிதியுதவி அளிப்பதைத் தடை செய்யும் 'நாட் ஆன் அவர் டைம்!' சட்டமசோதாவை மீண்டும் செனட் சபையில் நிறைவேற்றுவதே தனது முதல் முன்னுரிமை என அவர் தெரிவித்துள்ளார்.