8 ஆண்டுகால விண்வெளிப் பயணம் ; புதன் கோளின் சுற்றுப்பாதையை அடைந்த 'பெப்பிகொலம்போ
ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இணைந்து அனுப்பிய 'பெப்பிகொலம்போ' என்ற இரட்டை விண்கலம், புதன் கோளின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோளான புதனை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் (ESA), ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமும் (JAXA) இணைந்து இரண்டு ரோபோ ஆய்வுக் கலன்களைக் கொண்ட 'பெப்பிகொலம்போ' விண்கலத்தை உருவாக்கின.
கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி, 'ஏரியன்-5' ரொக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. நீண்ட பயணத்தை மேற்கொண்ட இந்த விண்கலம், புதன் கோளை ஆய்வு செய்வதற்கான முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
இதன் மூலம், புதன் கோளுக்குச் சென்ற மூன்றாவது விண்கலத் திட்டமாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக, 1970களில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் 'மரைனர் 10' விண்கலம் புதன் கோளை மூன்று முறை கடந்து ஆய்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு புதன் கோளின் சுற்றுப்பாதையில் நுழைந்த நாசாவின் 'மெசெஞ்சர்' விண்கலம், எரிபொருள் தீர்ந்ததைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு புதன் கோளில் மோதி தனது பணியை நிறைவு செய்தது.

'மரைனர் 10' விண்கலத் திட்டத்தில் பணியாற்றிய மறைந்த இத்தாலியக் கணிதவியலாளர் கியூசெப் பெப்பி கொலம்போவின் நினைவாகவே இந்த விண்கலத்துக்கு 'பெப்பிகொலம்போ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சுமார் 16,800 கோடி ரூபாய் திட்டச் செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த விண்வெளித் திட்டத்தில் இரண்டு தனித்தனி ரோபோ ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன.
திட்டமிட்டபடி, இந்த ஆய்வுக் கருவிகள் தனித்தனியாகப் பிரிந்து, வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் இருந்து புதன் கோளின் மேற்பரப்பு, காந்தப்புலம் மற்றும் அதன் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய உள்ளன.
சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அதீத வெப்பத்தை எதிர்கொள்ளும் புதன் கோளின் தோற்றம், அமைப்பு மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்த புதிய தகவல்களை இந்த ஆய்வுகள் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.