ட்ரம்ப் எழுதிய கடிதத்தைக் கூட திறக்காமல் அலட்சியம் செய்த வடகொரிய தூதர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்குப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், வடகொரியத் தரப்பிலிருந்து எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை என அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அணுவாயுதத் திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக முரண்பாடுகள் நீடித்து வருகின்றன.

வடகொரியா தனது அணுவாயுதத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்பதே அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது.
எனினும், வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு கிம் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதற்காக உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு வழிகள் ஊடாக வடகொரியத் தரப்பைத் தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், இந்த முயற்சிகளுக்குப் பதிலளிக்க வடகொரியத் தரப்பு முன்வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, கிம் ஜாங் உன்னுக்குக் கடிதமொன்றை அனுப்ப ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
குறித்த கடிதத்தை நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான வடகொரிய அலுவலகத்தின் ஊடாக ஒப்படைக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, அமெரிக்க அதிகாரிகள் சிலர் வடகொரிய அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்து, அங்கு வந்த வடகொரியத் தூதுவர் ஒருவரிடம் ட்ரம்ப் எழுதிய கடிதத்தை ஒப்படைத்துள்ளனர்.

எனினும், அந்தக் கடிதத்தை வடகொரியத் தூதுவர் திறந்து பார்க்கக்கூட இல்லை எனக் கூறப்படுகிறது.
பின்னர், ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது அமெரிக்கப் பிரதிநிதியின் முன்னிலையில் அந்தக் கடிதத்தை வைத்துவிட்டுச் சென்றதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி நேரடியாகத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகளுக்கும், கடிதம் மூலம் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை ஏற்படுத்த முயன்றதற்கும் வடகொரியத் தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைக்காதமை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
எனினும், குறித்த கடிதத்தின் உள்ளடக்கம் மற்றும் அதற்குப் பின்னரான இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.