பிரித்தானியாவில் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் 425 பேர் கைது
பிரித்தானியாவில் பலஸ்தீனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 425 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலஸ்தீன நடவடிக்கை என்ற குழுவை தடை செய்வதற்கான பிரித்தானியாவின்ன் முடிவை எதிர்த்து நடந்த போராட்டத்தில் 365ற்கும் மேற்பட்டவர்களை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கறுப்பு மற்றும் வெள்ளை பாலஸ்தீன ஸ்கார்ஃப்களை அணிந்து பாலஸ்தீன கொடிகளை அசைத்து, காஸா ஆதரவு முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், இனப்படுகொலையை எதிர்க்கிறேன், பாலஸ்தீன நடவடிக்கை குழுவிற்கு ஆதரவளிக்கிறேன் போன்ற வாசகங்களுடன் பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஸாவில் இனப்படுகொலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே இஸ்ரேல் கூறி வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் வெளியேற்ற முயற்சி செய்தனர்.
இந்த நிலையில், வெட்கக்கேடு என பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். மேலும், தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பை ஆதரித்ததற்காக 365 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் மீதான தாக்குதல்களுக்காக ஐந்து பேர் உட்பட பிற குற்றங்களுக்காக ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் பாலஸ்தீன நடவடிக்கை குழுவில் சிலர் இஸ்ரேலுக்கு பிரித்தானியாவின் ஆதரவை எதிர்த்து ரோயல் விமானப்படை தளத்திற்குள் நுழைந்து விமானங்களை சேதப்படுத்தியதை அடுத்து, பிரித்தானிய அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பாலஸ்தீன நடவடிக்கையை தடை செய்தது.