கனடாவில் கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது
கனடாவின் பீல் பிராந்தியத்தில் கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரம்டன் மற்றும் மிசிசாக பகுதியில் தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நபர்களை இலக்கு வைத்து இந்த கப்பம் கோரல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரையில் மொத்தமாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 154 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கப்பம் கோரல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் தொடர்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
முகநூல் மற்றும் whatsapp ஊடாக இந்த கப்பம் கோரல்கள் மற்றும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரம்டன், ஹமில்டன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய பகுதிகளை சேர்ந்த சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 வயதான ஹார்மான்ஜிட் சிங், 44 வயதான டெஜிண்டர் டாட்லா, 21 வயதான ருக்சார் அசாகாக்ஸி, 24 வயதான தினேஷ் குமார், 27 வயதான பந்துமான் சேக்கோன் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கப்பம் கோரல் சம்பவங்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.