அமெரிக்காவில் 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி சுட்டுக்கொலை:
அமெரிக்காவில் 5 வயது இந்திய வம்சாவளி சிறுமியை சுட்டு கொன்ற அமெரிக்கருக்கு மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 35 வயதுடைய ஜோசப் லீ ஸ்மித் என்பவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
விமல் மற்றும் ஸ்னேகா பட்டேல் என்ற தம்பதி மோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.
அவர்கள் தரை தளத்தில் மகள் மியா (Mya Patel) மற்றும் அவரது சகோதரியுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
அந்த மோட்டலின் வாகன நிறுத்தும் இடத்தில் ஸ்மித் மற்றொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார்.
ஆனால், அது அந்த நபருக்கு பதிலாக பட்டேல் தம்பதியின் மகளான சிறுமி மியா மீது பட்டுள்ளது. இதனால் குறித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த வழக்கில் மாவட்ட நீதிபதி ஜான் டி மோஸ்லி, மியா பட்டேலை கொலை செய்த குற்றத்திற்காக 60 ஆண்டுகள், நீதியை முடக்கியதற்காக 20 ஆண்டுகள் மற்றும் பட்டேலை சுட்டு கொன்றதுடன் தொடர்புடைய தனியான குற்றச்சாட்டுகளுக்காக 20 ஆண்டுகள் என மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபட்டவரான ஸ்மித் அடுத்தடுத்து இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
இந்த தண்டனை காலத்தில் ஸ்மித் பரோலில் வரவோ, தண்டனையை குறைக்கவோ முடியாது. சிறையில் அவரது நல்ல செயல்களுக்காக முன்பே விடுவிக்கும் சலுகை உள்ளிட்ட வேறு எந்த பலன்களையும் ஸ்மித் பெற முடியாது என்றும் முழு தண்டனை காலமும் அவர் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.