கனடாவில் வலி நிவாரணி ஒன்றிற்குத் தட்டுப்பாடு
கனடாவில், முக்கியமான வலி நிவாரணி ஒன்றிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கனடா சுகாதாரத்துறையின் இணையதளம் தெரிவிக்கிறது.
Tylenol 3 மற்றும் Percocet என்னும் வலி நிவாரணிகளுக்குத்தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
என்றாலும், மக்கள் பதற்றப்படவேண்டாம் என்று கூறியுள்ள கனேடிய மருந்தகக் கூட்டமைப்பின் மூத்த இயக்குநரான Sadaf Faisal என்பவர், மருந்தகங்களில் இந்த மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகள் கிடைக்கும் என்கிறார்.
அதே நேரத்தில், உங்களிடம் இருக்கும் மருந்துகள் முழுமையாக காலியாகும்வரை காத்திருக்கவேண்டாம், முன்கூட்டியே சென்று இந்த மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வலி நிவாரணிகளை தயாரிக்கத் தேவையான உட்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே மருந்து தட்டுப்பாட்டுக்குக் காரணம் ஆகும்.
Paracetamol என்னும் வலி நிவாரணி மற்றும் காய்ச்சலைக் குறைக்கும் மாத்திரை அல்லது மருந்துகளைத் தயாரிக்கத் தேவையான உட்பொருட்கள், பெரும்பாலும் இந்தியா, சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்துதான் உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.