இங்கிலாந்தை விட்டு வெளியேறும் 50,000 தாதியர்கள்; மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியில் தள்ளும்
இங்கிலாந்தில் அரசாங்கத்தின் குடியேற்றத் திட்டங்கள் காரணமாக சுமார் 50,000 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்றும், இது தேசிய சுகாதார சேவையை மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியில் தள்ளும் என்றும் புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
5 ஆண்டுகளுக்குப் பின்னர் தானாகவே குடியேறிய அந்தஸ்தைப் பெறுவதற்குப் பதிலாக, இங்கிலாந்தில் குடியேற விண்ணப்பிக்க 10 ஆண்டுகள் வரை காத்திருக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

அரசியல் கால்பந்து
வெளிநாட்டு தொழிலாளர்களின் திறன் தேவைகளை பட்டப்படிப்பு நிலைக்கு உயர்த்துவது, அனைத்து வகையான விசாக்களுக்கும் தேவையான ஆங்கில மொழியின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட சீர்த்திருத்தங்கள் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இந்தத் திட்டங்கள் குறித்த பொது ஆலோசனை விரைவில் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தத் திட்டங்கள் நெறிமுறைக்கு மாறானவை என்றும், மிகவும் திறமையான புலம்பெயர்ந்தோரை “அரசியல் கால்பந்து” போல நடத்துவதாகவும் தாதியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த திட்டங்களின் கீழ், பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே பணியாளர்கள் நெருக்கடியினால் அழுத்தத்தின் கீழ் உள்ள சுகாதார சேவையை மிகவும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் கூறுப்படுகிறது.
இதனிடையே Royal College of Nursing நடத்திய ஒரு கணக்கெடுப்பில், இந்தத் திட்டங்கள் தேசிய சுகாதாரச் சேவை மற்றும் சமூகப் பராமரிப்பு வெளிநாட்டு பணியாளர்களிடம் ஆழ்ந்த கவலைகளை தூண்டியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
200,000 க்கும் மேற்பட்ட சர்வதேச அளவிலான தாதியர் ஊழியர்கள் நாடு முழுவதும் உள்ளனர். இது இங்கிலாந்தின் மொத்த பணியாளர்களான 794,000 பேரில் சுமார் 25 சதவீதமாகும்.
இந்த நிலையில் அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த திட்டங்களினால் அவர்களில் பலர் இப்போது நிரந்தரமாக இங்கிலாந்தை விட்டு வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.