நைஜீரியா மோட்டார் பைக் கொள்ளையர்கள் சுட்டதில் 50 பேர் பலி
நைஜீரியாவில் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிலில் வந்து கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 50 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில்,போகோ ஹராம், ஐ.எஸ்., போன்ற பயங்கரவாதிகளுடன், ஆயுதமேந்திய கொள்ளை கும்பல்களும் ஏராளமாக உள்ளன.
அந்த கும்பல் கடத்தல், கொள்ளை, பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை அரங்கேற்றி வருகின்றன.

சில தினங்களுக்கு முன்பு கெப்பி மாகாணத்தில், லகுராவா என்ற ஆயுத கும்பல் கால்நடைகளுக்காக 33 பேரை சுட்டுக்கொன்றது.
இந்நிலையில், மற்றொரு ஆயுத கும்பல், வடமேற்கு பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளது.
பைக்குகளில் வந்த ஆயுத கும்பலைச் சேர்ந்தவர்கள், துங்கன் டட்சே என்ற கிராமத்தில் புகுந்து விடிய விடிய துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அங்கிருந்த வீடுகளுக்கும் தீ வைத்த அவர்கள், தப்பி ஓட முயன்றவர்களை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பல பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். எத்தனை பேர் கடத்தப்பட்டனர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.