பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் படுகொலையில் புதிய திருப்பம்: வெளியான பின்னணி
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இளம் வயது தாயார் மற்றும் அவரது கைக்குழந்தை உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதான சந்தேக நபர்களை நோவா டேவிட் பியர்ட் (25) மற்றும் ஏஞ்சல் ‘நானு’ யூரியார்டே (35) என ஷெரிப் அலுவலகம் அடையாளம் கண்டுள்ளது. மேலும், ஆறு மரணங்களுக்கும் கொலைக் குற்றச்சாட்டை இவர்கள் இருவரும் எதிர்கொள்வதாக துலரே கவுண்டி மாவட்ட சட்டத்தரணி டிம் வார்டு அறிவித்துள்ளார்.
ஜனவரி 16ம் திகதி விடிகாலை 3.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவர அதிகாரிகள் தரப்பு சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதில், தலையில் சுடப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிசார் விரிவான விசாரணைக்கு திட்டமிட்டு, இந்த விவகாரம் தொடர்பில் ஐந்து வெவ்வேறு சிறைகளில் உள்ள எட்டு செல்கள் மற்றும் 16 கைதிகளை விசாரணைக்கு உட்படுத்தியதாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் நடந்து சில வாரங்களில் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஒரே குடும்பத்தை சேர்ந்த பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதன் நோக்கம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.