உக்ரேனில் 600,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு!
உக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ரஷ்ய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் குறைந்தது 600,000 மக்கள் மின்சாரமின்றி தவிப்பதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை (14) தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட எரிசக்தி போர்நிறுத்தத்தின் கீழ் உள்ள வசதிகளை மொஸ்கோ வேண்டுமென்றே குறிவைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கீவ் நகரில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டதாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் உக்ரேனின் அரசு அவசரச் சேவை அமைப்பு (DSNS) தெரிவித்துள்ளது.
இரவோடு இரவாக நடத்தப்பட்ட தனது மிகப்பெரிய தாக்குதல்கள், கீவ் மற்றும் கார்கிவ் பகுதிகளில் உக்ரேன் இராணுவம் பயன்படுத்தி வந்த தகவல் தொடர்பு மற்றும் எரிசக்தி நிலையங்களை இலக்காகக் கொண்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
தலைநகர் மொஸ்கோ மற்றும் 2014-ல் ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரேனின் தெற்குப் பகுதியான கிரீமியா உள்ளிட்ட ரஷ்யாவின் பல்வேறு பிராந்தியங்களுக்கு மேலே, ஒரே இரவில் 902 உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே இரவில் ரஷ்யா 39 பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளையும் 128 ட்ரோன்களையும் ஏவியதாகவும், அவற்றில் நான்கு ஏவுகணைகளும் 115 ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது.