பிக்கரிங் பகுதியில் கார் மோதி 68 வயது முதியவர் பலி
பிக்கரிங் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில், எஸ்.யு.வி ரக கார் ஒன்று மோதியதில் 68 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச் சம்பவம் சனிக்கிழமை இரவு 10 மணிக்குப் பின்னர், 1105 கிங்ஸ்டன் வீதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இடம்பெற்றுள்ளது.
கருப்பு நிற ஃபோர்டு ரக எஸ்.யு.வி கார் ஒன்று வாகன நிறுத்துமிடத்தினூடாகச் சென்றுகொண்டிருந்த போது, அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த முதியவர் மீது மோதியுள்ளதுடன், அவர் காரின் அடியில் சிக்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள், காரின் அடியில் சிக்கியிருந்த முதியவரை மீட்பதற்காக அந்த ஃபோர்டு காரை மேலே தூக்கி, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசர முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவசர உதவிப் பிரிவினரின் தீவிர முயற்சிகளுக்கு மத்தியிலும், அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்ததுடன், புலனாய்வு அதிகாரிகளின் விசாரணை நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதோடு, இது தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து பொலிஸாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.