வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக ஐரோப்பாவில் 7 வானூர்திகளுக்கு சோதனை
ஐரோப்பிய வான்பரப்பில் இயங்கிய பல வானூர்திகளுக்கு விடுக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து, இத்தாலியின் ரோம் நகரில் தரையிறக்கப்பட்ட இரண்டு ரயான்ஏர் (Ryanair) வானூர்திகள் உட்பட மொத்தம் 7 வானூர்திகள் தீவிர பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அச்சுறுத்தல் குறித்து தகவல் கிடைத்தவுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட வானூர்திகள் அனைத்தும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, பாதுகாப்புப் படையினரால் தீவிரமாகச் சோதனையிடப்பட்டன.
சோதனையிடப்பட்ட 7 வானூர்திகளில், ரோமில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்ட அயர்லாந்தின் ரயான்ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான 2 வானூர்திகளும் அடங்கும்.
இந்த சம்பவம் காரணமாகக் குறிப்பிட்ட சில வானூர்திச் சேவைகளில் தாமதம் ஏற்பட்டபோதிலும், பயணிகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.