“பில்லி சூனியம்” ; ஸ்பெயின் சென்ற அகதிகள் நடுக்கடலில் கொலை செய்யப்பட்டார்களா?
ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி சென்ற படகில் 70 அகதிகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஸ்பெயின் காவல்துறை தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட இந்தப் படகில் சுமார் 320 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கேனரி தீவுகளை 251 பேர் மட்டுமே அடைந்துள்ளனர்.
கைது செய்து விசாரணை
படகுப் பயணத்தின் போது, 70 பேர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர் அல்லது இறந்துள்ளனர். அதேவேளை படகில் பயணித்த சிலர், மற்ற பயணிகளை “பில்லி சூனியம் செய்பவர்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டோ அல்லது வலுக்கட்டாயமாக கடலில் தள்ளிவிடப்பட்டோ இருக்கலாம் என உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிர் பிழைத்தவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில், இந்தப் படகுப் பயணத்தில் திட்டமிட்ட கொலைகள் நடந்திருக்கலாம் என ஸ்பெயின் காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, பலரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக ஸ்பெயின் தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம், அகதிகள் பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
அதேவேளை இது போன்ற மனித கடத்தல் வழக்குகளில் பல குற்றங்கள் மறைக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன