அமெரிக்காவில் 72 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு; வெளியான பகீர் தகவல்!
அமெரிக்காவில் 72 லட்சம் குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ அகாடமி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கமும் இணைந்து வெளியிட்டுள்ளது.
அங்கு கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படும் அளவு, சராசரியாக 1 லட்சம் குழந்தைகளில் 9 ஆயிரத்து 562 பேர் கொரோனோ பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவில் இதுவரை 71 லட்சத்து 96 ஆயிரத்து 901 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அமெரிக்காவின் மொத்த கொரோனா பாதிப்பில் 17.2 சதவீதத்தினர் குழந்தைகளே என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அந்தவகையில் கடந்த 1 வாரத்தில் மட்டும், 1 லட்சத்து 64 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, அதற்கு முந்தைய வார கொரோனா பாதிப்பை விட 24 சதவீதம் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம், அமெரிக்காவில் தொடர்ந்து 18வது வாரமாக 1 லட்சத்துக்கும் அதிகமாக குழந்தைகளின் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் முதல், 21 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 0.27 சதவீதத்தினர் மட்டுமே குழந்தைகள் என்பது சற்று ஆறுதலான விஷயமாக கருதப்படுகிறது.
எனினும் , அமெரிக்காவில் கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரில், 4 சதவீதத்தினர் மட்டுமே குழந்தைகள் என்றும், இதன்மூலம் கொரோனா தொற்றால் குழந்தைகள் மிகத்தீவிரமான உடல் உபாதைகளுக்கு ஆளாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவால் குழந்தைகளுக்கு ஏற்படும் நீண்ட கால பாதிப்பு குறித்தும், குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தரவுகள் கொண்டு கண்டறிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.