ரஷ்ய அணுமின் நிலையத்தை குறிவைத்து ஆளில்லா வானூர்தி தாக்குதல்!
மேற்கு ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியைச் சேர்ந்த அணுமின் நிலையத்தைக் குறிவைத்து யுக்ரைனிய ஆளில்லா வானூர்தி ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஆளில்லா வானூர்தி பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா குறிப்பிடப்பட்டுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வானூர்தி அணுமின் நிலையத்தின் மின்மாற்றியைச் சேதப்படுத்தியுள்ள போதிலும் அணு கதிர்வீச்சு அபாயம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச கட்டுப்பாடு
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணுசக்தி நடைமுறைக்கு அமைய அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நடைமுறையை இரண்டு தரப்பினரும் பலமுறை மீறி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட இன்றைய தினம் யுக்ரைன் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றது. கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திடம் இருந்து யுக்ரைன் இன்றைய தினத்திலேயே சுதந்திரத்தைப் பெற்றது.
இந்த நிலையில், யுக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் பிரதான வீதிகளில் யுக்ரைன் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. யுக்ரைனிய மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான இன்றைய நாளில் யுக்ரைனுக்கு தனது ஆதரவினை வழங்குவதாக இங்கிலாந்தின் பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இங்கிலாந்து இராணுவத்தினர், 2026 ஆம் ஆண்டின் இறுதிவரை யுக்ரைனிய இராணுவத்திற்குப் பயிற்சிகளை வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.