கனடாவில் நாயை தாக்கியவர் கைது
கனடாவின் ஓஷாவா நகரில் ஒரு நாயை அடித்து பாதிப்பை ஏற்படுத்தியதாக 48 வயதுடைய ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜூலை 8ஆம் திகதி ஸ்டீவென்சன் சாலையின் தெற்குப் பகுதி மற்றும் மான்ட்காம் அவென்யூ பகுதியில் உள்ள அந்த நபரின் வீட்டில் தேடுதல் உத்தரவு நடைமுறையில் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த தேடுதலின் போது, தாக்கப்பட்ட நாயுடன் சேர்த்து மொத்தம் எட்டு நாய்கள் அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
தாக்கப்பட்ட நாயின் உடல்நிலை குறித்து தெளிவான தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. மீட்கப்பட்ட அனைத்து நாய்களும் தற்போது விலங்கு நலன் சேவைகளால் பராமரிக்கப்படுகின்றன.
அவை சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்மீது "விலங்குகளுக்கு தேவையற்ற வலி, துன்பம் அல்லது காயம் உண்டாக்குதல்" என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.