3D பிரிண்டர் மூலம் சட்டவிரோத துப்பாக்கி தயாரித்த நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, 3D பிரிண்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக துப்பாக்கிகள் தயாரித்தமைக்காக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தைப்பொருட்களை விற்பனை நோக்கில் வைத்திருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டைசன் சாவேரியோ சான்டோல்லா (Tyson Saverio Santolla) என்பவர், மெத்தாம்பெட்டமின் மற்றும் பென்டனில் ஆகிய போதைப்பொருட்களை விற்பனை நோக்கில் வைத்திருந்ததும், சட்டவிரோதமாக துப்பாக்கிகள் தயாரித்ததுமாகிய குற்றங்களை 2025 ஜூன் மாதத்தில் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் கும்பல் எதிர்ப்பு சட்ட அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு, சட்டவிரோத துப்பாக்கி அமலாக்க குழுவினால் 2021 ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2021 மே மாதத்தில், அபட்ஸ்ஃபோர்டு (Abbotsford) மற்றும் ஆல்டர்க்ரோவ் (Aldergrove) பகுதிகளில் உள்ள நான்கு இடங்களில் சோதனை உத்தரவுகளை அமல்படுத்திய காவல்துறையினர், மூன்று பேரை கைது செய்தனர். அந்தச் சோதனைகளின் போது, “கணிசமான அளவிலான போதைப்பொருட்கள்” கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
மேலும், கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் பொருட்களும், 3D பிரிண்டர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட துப்பாக்கி தயாரிப்பு அமைப்பும் கைப்பற்றப்பட்டதாக அறிவித்துள்ளது.
சான்டோல்லா மீது 2023 மே மாதத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதே நேரத்தில், அந்தச் சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட மற்ற நபர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டதா என்பது குறித்து காவல்துறை விளக்கமளிக்கவில்லை.