காசா உதவி மையங்களில் இதுவரை 800 பாலஸ்தீனர்கள் கொலை
காசாவில் உதவி மையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில், மே முதல் இதுவரை 800 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்துள்ளது.
காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் தீவிரவாத அமைப்பு, 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது.
இதைத் தொடர்ந்து, ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.
அந்தவகையில், காசாவில் பல்வேறு இடங்களில் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, காசாவில் உதவி மையங்களில் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தி வருவதால், பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
உதவி மையங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில், 2025 மே முதல் இதுவரை 800 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
மே மாத இறுதியிலிருந்து காசாவில் உள்ள உதவி மையங்களிலிருந்து, உணவு பெற முயன்றபோது பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வருவதாகவும், 2025 ஜூலை 7 ஆம் திகதி முதல் இதுவரை 798 பேரின் கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ரவினா ஷம்தாசானி (Ravina Shamdasani) தெரிவித்துள்ளார்.
அவற்றில், 615 பேர் உதவி மையங்களில் உணவு பெற முயன்ற போது கொல்லப்பட்டதாகவும், 183 பேர் உதவி மையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் கொல்லப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.