புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரான்சில் பற்றியெரிந்த 874 கார்கள்!
உலகம் முழுவதும் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரேவற்பது வழக்கமாக இருந்து வரும்m நிலையில், ஒரு சில நாடுகளில் பாரம்பரிய முறைப்படி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
அந்த வகை யில் பிரான்சில் சமீப ஆண்டுகளாக புத்தாண்டை வரவேற்கும் விதமாக கார்களுக்கு தீ வைக்கும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க் பிராந்தியம் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் இந்த நடைமுறை பிரபலமாக இருந்து வருகிறது.
அதேவேளை கார்களுக்கு தீ வைப்பதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்தாலும் ஆண்டு தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான கார்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. இந்த நிலையில் பிரான்சில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
எனினும் அதை மீறியும் கடந்த 31 ஆம் திகதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 874 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைவு என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் , கடந்த 2019-ம் ஆண்டில் புத்தாண்டு தினத்தில் மொத்தம் 1,316 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.