விமான இறக்கை மீது நின்றபடி 97 வயது பாட்டி கின்னஸ் சாதனை
பிரிட்டனைச் சேர்ந்த 97 வயதான மூதாட்டி ஒருவர், நடுவானில் பறக்கும் விமானத்தின் இறக்கையில் நின்றபடி ஆபத்தான வான் சாகசத்தில் ஈடுபட்டு, புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
பிரிட்டனின் செல்டன்ஹாம் பகுதியைச் சேர்ந்த பெட்டி ப்ரோமேஜ் என்ற 97 வயதான மூதாட்டியே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
விமான சாகசங்களில் ஆர்வம் கொண்ட இவர், நடுவானில் பறக்கும் விமானத்தின் இறக்கையில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யேக ஆசனத்தில் பாதுகாப்பாக தன்னை இணைத்துக்கொண்டு வான் சாகசங்களை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சினாரெஸ்டர் பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தில் இருந்து ஏரோ-சூப்பர்பேடிக்ஸ் இருதள விமானம் ஒன்று புறப்பட்டது.
அந்த விமானத்தின் இறக்கையில் நின்றபடி பெட்டி ப்ரோமேஜ் வான் சாகசத்தில் ஈடுபட்டார். விமானம் மணிக்கு சுமார் 150 மைல் வேகத்தில் வானில் வளைந்து நெளிந்து பறந்த நிலையில், ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக அவர் ஆபத்தான முறையில் விமானத்தின் இறக்கையில் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சாகசத்தின் மூலம் ‘உலகின் மிக வயதான பெண் விமான இறக்கை சாகச வீராங்கனை’ என்ற கின்னஸ் உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.
பெட்டி ப்ரோமேஜ் இதற்கு முன்னரும் இதே போன்ற வான் சாகசத்தை மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தனது 93ஆவது வயதில் விமான இறக்கையில் நின்றபடி சாகசம் செய்து, உலகின் வயதான விமான இறக்கை சாகச வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது 97ஆவது வயதில் மீண்டும் வானில் பறந்து, தனது சொந்த சாதனையையே அவரே முறியடித்துள்ளார். பெட்டி ப்ரோமேஜுக்கு கடந்த 2025ஆம் ஆண்டு திடீரென பக்கவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவரது பேச்சுத்திறன் மற்றும் உடல் இயக்கம் ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்ததாகக் கூறப்படுகிறது. உடல்நலப் பாதிப்புகளைக் கடந்து, தனது வயதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் வான் சாகசத்தில் ஈடுபட்டு கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
தனது சாதனை குறித்து பெட்டி ப்ரோமேஜ் கூறுகையில், வயதாகிவிட்டதால் அமைதியாக வீட்டில் இருப்பது தனக்குப் பிடிக்காது எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது தன்னால் கார் ஓட்ட முடியவில்லை என்றும், பார்வையும் மங்கலாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தன்னால் முடிந்தவற்றைச் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இன்னும் இரண்டு ஆண்டுகள் உயிருடன் இருந்தால், மீண்டும் ஒருமுறை வானில் பறக்க விரும்புவதாகவும் அவர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
பெட்டி ப்ரோமேஜ் தனது 87ஆவது வயதில் முதன்முறையாக விமான இறக்கை வான் சாகசத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் இதுவரை 6 முறை விமான இறக்கையில் பயணித்து வான் சாகசங்களை மேற்கொண்டுள்ளார்.
இந்தச் சாகசப் பயணத்தின் மற்றொரு முக்கிய நோக்கம், தனக்கு சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றிய செல்டன்ஹாம் பொது மருத்துவமனையின் பக்கவாதப் பிரிவுக்கு நிதியுதவி திரட்டுவதாகும்.
தனது உடல்நலப் போராட்டத்துக்குப் பின்னரும் தன்னம்பிக்கையை இழக்காமல், மருத்துவமனைக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் 97 வயதில் ஆபத்தான வான் சாகசத்தில் ஈடுபட்டு, தனது சொந்த உலக சாதனையையே முறியடித்த பெட்டி ப்ரோமேஜின் முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.