அமெரிக்காவில் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்; இருவர் மீட்பு
அமெரிக்காவின் பால்டிமோர் நகரம் அருகே, சரக்கு கப்பல் மோதி உடைந்த பாலத்தில் இருந்து ஆற்றில் தவறி விழுந்தவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆற்றில் மூழ்கிய இரண்டு பேரை கடலோர காவல்படையினர் மீட்டிருப்பதாகவும் 8 பேரை காணவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆற்றை கடக்க முடியாமல் 20 கப்பல்கள்
மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிபர் ஜோபைடன் கூறினார். அதேவேளை விபத்து காரணமாக அப்பகுதியில் சரக்குப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
ஐயாயிரம் கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு இலங்கை நோக்கி சென்ற டாலி என்ற சரக்கு கப்பல், நள்ளிரவு ஒன்றரை மணியளவில் பாலத்தின் தூணில் மோதியதால், முழு பாலமும் இடிந்து விழுந்தது.
பாலத்தில் சென்ற வாகனங்கள் ஆற்றில் விழுந்ததில், இதுவரை 2 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், 20 பேரை தேடிவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளை 20 கப்பல்கள் ஆற்றை கடக்க முடியாததால் சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.