பாரிஸில் தாயுக்கும் மகளுக்கும் நேர்ந்த கொடூர செயல்!
பாரிஸின் புறநகர் பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் எசோன் மாவட்டத்திற்குட்பட்ட வின்னியு சூர்- சென் (Vigneux-sur-Seine) பகுதியில் இடம்பெற்றுள்ளது. 50 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 14 வயது மகளும் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
அயலவர்கள் வழங்கிய தகவலுக்கமைய, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த போது தாய் உயிரிழந்துள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மகளை மருத்துவக்குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் நடத்தியது குறித்த பெண்ணின் முன்னாள் கணவர் எனவும், 45 வயதுடைய குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணும் கைது செய்யப்பட்ட நபரும் 20 வருடங்களாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த கணவர் மனைவி எனவும் தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வீட்டிற்கு வந்த போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் 14 வயதுடைய மகளையும், தாயை பல முறை கத்தியால் குத்தியுள்ளார்.
சம்பவத்தையடுத்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பி சென்று மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவரது பதில்கள் குழப்பத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சந்தேக நபரை மனநல மருத்துவரிடம் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.