கனடாவின் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு
கனடாவின் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நேற்று முன்தினம் நுழைந்த மர்ம நபரால், நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டுள்ளது.
மிகுந்த பாதுகாப்பு கெடுபிடிகள் உள்ள ஈஸ்ட் பிளாக் எனும், நாடாளுமன்ற கட்டிடங்கள் அமைந்துள்ள வளாகத்திற்குள், நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அந்த நபர், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தார் என ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
அது குறித்த தகவல் அறிந்ததும், அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உள்ளே இருந்தவர்கள், அறைகளை பூட்டி, பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதுடன், அந்த பகுதியில் சாலை போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு, நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டது.
பொலிஸாரின் நீண்ட நேர தேடுதலின் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தின் உள்ளே மறைந்திருந்த நபரை, இரவு 11:40 மணிக்கு கண்டுப்பிடித்துள்ளனர்.
யார் அந்த நபர் என்பது தொடர்பிலும் அவர், ஆயுதங்கள் எதையும் மறைத்து எடுத்துச் சென்றாரா என்பது குறித்தும் எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.