கனடவில் இடம்பெற்று வரும் மோசடி குறித்து எச்சரிக்கை
கனடாவில் “Milk Settlement” எனப்படும் போலியான நஷ்டஈடு திட்டம் தொடர்பாக குறுந்தகவல் (SMS) மூலம் பரவி வரும் மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இத்தகைய எந்த வழக்கோ அல்லது நஷ்டஈடு திட்டமோ இல்லாத நிலையில், சிலர் இதனை பயன்படுத்தி மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குறுந்தகவல்கள், “நீங்கள் நஷ்டஈடு பெற தகுதியுடையவர்” என கூறி, ஒரு இணைப்பை (link) அழுத்தி தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றன.

இது நம்பகத்தன்மை உள்ளதாக தோற்றமளிக்க, உண்மையான வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு மோசடிகள் வடிவமைக்கப்படுகின்றன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒன்டாரியோவைச் சேர்ந்த டான் ஸ்டோன்மேன் (Don Stoneman), இந்த செய்தி தன்னுடைய கவனத்தை ஈர்த்ததாக கூறினார்.
பால் பொருட்கள் தொடர்பான எந்த வழக்கையும் நான் முன்பு கேள்விப்பட்டதில்லை,” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியில் கொடுக்கப்பட்ட எண்ணிற்கு அழைத்தபோது, பொதுவான குரல் அஞ்சல் (voicemail) மட்டுமே கிடைத்தது. அந்த எண் நோவா ஸ்கோஷியா பகுதியில் இருப்பதை அறிந்ததும் சந்தேகம் அதிகரித்ததாகவும் அவர் கூறினார்.
மற்றொருவர் கிரிஸ் ஹெர்மன் (Chris Hermann), குறுந்தகவலில் வழங்கப்பட்ட இணையதளம் முதலில் அரசாங்க தளத்தைப் போன்ற தோற்றத்துடன் இருந்ததாக தெரிவித்தார். “அதே சின்னங்கள், அதே வடிவமைப்புகள் இருந்ததால் நம்பத்தகுந்ததாக தோன்றியது,” என்றார்.
முன்பு உண்மையான நஷ்டஈடு தொகைகளை பெற்ற அனுபவம் இருந்ததால் இந்த செய்தி நம்பகமாக தோன்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், அந்த தளம் கடன் அட்டை விவரங்களை கேட்கத் தொடங்கியபோது சந்தேகம் அதிகரித்ததாக ஹெர்மன் கூறினார். “அப்போது இது சரியல்ல என்று உணர்ந்தேன்,” என்றார்.
சைபர் பாதுகாப்பு நிபுணர் டெரி கட்ட்லர் (Terry Cutler), மோசடி செய்பவர்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களை சேகரித்து, “நீங்கள் பணம் பெற தகுதி பெற்றுள்ளீர்கள்” என்ற தகவல்களுடன் பரவலாக செய்திகளை அனுப்புகின்றனர் என தெரிவித்தார்.
இந்த இணைப்புகளை அழுத்தும் போது, போலியான இணையதளங்களுக்கு பயனர்கள் வழிமாற்றப்படுகின்றனர். 2022ஆம் ஆண்டு முதல் கனடியர்கள் மோசடிகளால் 2.4 பில்லியன் டாலருக்கும் மேல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலானவை இணைய வழி மோசடிகளாகும். சைபர் குற்றங்கள் ஆன்லைனுக்கு மாறியுள்ளதால், மோசடி செய்பவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க மிகவும் எளிதாகியுள்ளது எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இழந்த பணத்தை மீட்டெடுப்பது மிகவும் கடினம் என்பதால், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அறியாத இணைப்புகளை அழுத்தாமல், அதிகாரப்பூர்வ இணையதளங்களை நேரடியாக தேடி சரிபார்க்க வேண்டும் என்றும், சந்தேகமான தகவல்களை உடனடியாக புகார் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.