இளவரசி டயானா தொடர்பில் புதிய புத்தகம்; வெளிவரவுள்ள உண்மைகள்!
பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் சகோதரரான சார்லஸ் ஸ்பென்சர், தனது சகோதரி டயானாவை பற்றிய உண்மைகளை உலகிற்கு சொல்லும் வகையில் புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளதாக அறிவித்துள்ளார்.
டயானாவின் மறைவு நெருங்கி வரும் நிலையில், அவரது நினைவாக Swan Song: Diana, My Sister என்ற புத்தகம் வரும் செப்டம்பர் 22-ம் தேதி பிரிட்டன் மற்றும் பல நாடுகளில் வெளியிடப்பட உள்ளது. இது 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்படவுள்ளது.

பல பொய்களை தகர்த்து, உண்மையை வெளிப்படுத்தும் நோக்கம்
டயானா குறித்து காலப்போக்கில் பரவிய பல பொய்களை தகர்த்து, உண்மையை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு இந்த புத்தகத்தை எழுதியுள்ளதாக சார்லஸ் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.
1997-ல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா காலமான பிறகு, அவரது இறுதிச்சடங்கில் உருக்கமான உரையாற்றிய அவர், டயானாவின் மகன்களான வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோருடன் இன்றும் நெருக்கமான உறவை பேணி வருகிறார்.
தற்போதைய ராஜ குடும்பத்தின் சூழ்நிலைகள் மற்றும் டயானாவின் உண்மையான வாழ்க்கை முறையை அவரது சொந்த சகோதரரின் கண்ணோட்டத்தில் இந்த புத்தகம் விவரிக்கிறது.
டயானாவின் நினைவை போற்றுபவர்களுக்கும், அவரை நேரில் அறியாத இளம் தலைமுறையினருக்கும் இந்த புத்தகம் ஒரு வரலாற்று ஆவணமாக இருக்கும் என்று பதிப்பகம் தெரிவித்துள்ளது. அன்பு, கவர்ச்சி மற்றும் சுய சந்தேகங்கள் நிறைந்த ஒரு தனித்துவமான மனிதராக இளவரசி டயானா எப்படிப்பட்டவர் என்பதை இந்த புத்தகம் வெளிச்சம் போட்டு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.