வெறும் கண்களுக்கு தென்படக்கூடிய கோள்களின் அணிவகுப்பு
2025 ஆம் ஆண்டு ஒரு சில வாரங்களில் கோள்கள் அணிவகுப்புடன் வலுவான தொடக்கமாக அமையும் என்று வானியலாளர்கள் கூறியுள்ளனர்.
புதிய ஆண்டில் கோள்கள் அணிவகுப்பு என்பது நமது சூரிய குடும்பத்தின் பல கிரகங்கள் ஒரே நேரத்தில் இரவு வானில் தெரியும்.
அதன்படி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யூரேனஸ் ஆகிய ஆறு கோள்கள் 2025 ஜனவரி 21 ஆம் திகதிக்கு முந்தைய நாட்களிலும், அதன் பின்னர் சுமார் நான்கு வாரங்களிலும் தெரியும்.
இவற்றில் செவ்வாய், வெள்ளி, வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் வெறும் கண்களுக்குத் தெரியும். நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களைக் கண்டறிய, தொலைநோக்கி போன்ற உயர் ஆற்றல் கொண்ட பார்க்கும் சாதனம் தேவைப்படும்.
வடக்கு அரைக்கோளத்தில் இருந்து கிரகங்களைப் பார்க்க சிறந்த நேரம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இரவு 8:30 மணி ஆகும்.
முந்தைய அணிவகுப்புகளைப் போலன்றி, கோள்கள் ஒரே நேர் கோட்டில் வரிசையானதாக காணப்படாது இருப்பதால், ஆறு கோள்களையும் 2025 பெப்ரவரி மாதத்தின் இறுதி வாரம் வரை இரவில் பார்க்க முடியும்.
அதன் பின்னர், புதன் கோளும் சில நாட்களுக்கு ஏனைய கோள்களுடன் இணைவதனால், ஏழு கிரக அணிவகுப்பு தொடங்கும்.
இது பூமியைத் தவிர நமது சூரிய மண்டலத்தில் உள்ள ஏழு கோள்களின் கிரக அணிவகுப்பாக மாறும்.
இந்த காட்சி வாரக்கணக்கில் வானத்தில் தென்படுவதனால், கோள்கள் அணிவகுப்பானது அமெரிக்காவில் மட்டுமின்றி மெக்சிகோ, கனடா மற்றும் இந்தியாவிலும் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த பார்வை காலமாக 2025 ஜனவரி 21 தொடக்கம் பெப்ரவரி 21 ஆம் திகதிக்கு இடையில் இருக்கும்.
ஜனவரி 29 ஆம் திகதி அமாவாசையின் வாரத்தில் கிரக அணிவகுப்பைப் பார்க்க மிகவும் சிறந்த காலமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.