சிங்கப்பூரில் பொது மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!
சிங்கப்பூரில் மின்னிலக்க நாணயங்களைக் கையாள்வதில் உள்ள ஆபத்துகள் உள்ளது குறித்து முதலீட்டாளர்களை சிங்கப்பூர் நாணய வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்னிலக்க நாணயத் துறையில் தற்போது நிலவும் குழப்பம், வாடிக்கையாளர்களுக்கு அதில் பாதுகாப்பு இல்லை என்பதை வாரியம் நினைவூட்டியுள்ளது. ஒட்டுமொத்தப் பணமும் அதில் பறிபோகக்கூடும்.
Binance.com நிறுவனமும் வீழ்ச்சிகண்ட FTX.com நிறுவனமும் வெவ்வேறு விதங்களில் கையாளப்பட்டதைத் தற்காத்து வாரியம் அதனைத் தெரிவித்தது. அந்த விவகாரத்தில் சில அம்சங்கள் தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டது.
பைனான்ஸ் நிறுவனம் சிங்கப்பூரில் உரிமமின்றி வாடிக்கையாளர்களை ஈர்க்க மும்முரம் காட்டியதால் அது முதலீட்டாளர்களுக்கான எச்சரிக்கைப் பட்டியலில் வைக்கப்பட்டதாக வாரியம் கூறியது.
பைனான்ஸ், சிங்கப்பூர் வெள்ளியில் பரிவர்த்தனை செய்ய முன்வந்ததையும் PayNow போன்ற சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட கட்டண முறைகளை ஏற்றுக்கொண்டதையும் அது சுட்டியது.
ஆனால் FTX நிறுவனம் சிங்கப்பூர் வாடிக்கையாளர்களை ஈர்க்க மும்முரம் காட்டியதற்கான ஆதாரம் ஏதுமில்லை.
மேலும் அந்த மின்னிலக்கப் பரிவர்த்தனை நிறுவனத்தில் சிங்கப்பூர் வெள்ளியில் பரிவர்த்தனை செய்யும் வசதியும் இருக்கவில்லை என சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.