11 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த இளைஞன்; உயிர் தப்பிய அதிசயம்!
அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லோஸ் வேகாஸில் பாராசூட் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய இளைஞர், பாராசூட் திடீரென செயலிழந்ததால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
சாகச விளையாட்டுகளுக்குப் பிரபலமான லோஸ் வேகாஸ் நகரில், மிட்செல் டீக்கின் (வயது 25) என்ற இளைஞன் பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அவரது பயிற்றுவிப்பாளரும் சென்றிருந்தார்.
தற்போது சிகிச்சை
அவர்கள் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, துரதிர்ஷ்டவசமாக பாராசூட் திடீரெனச் செயலிழந்தது.
இதன் காரணமாக, மிட்செல் டீக்கின் மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் இருவரும் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த விபத்தில், இளைஞரான மிட்செல் டீக்கின் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இருப்பினும், அவருடன் சென்ற பயிற்றுவிப்பாளருக்கு படுகாயம் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்புக் குழுவினர் விரைந்து சென்று, கீழே விழுந்த இருவரையும் விமானம் மூலம் மீட்டனர்.
இதையடுத்து உடனடியாக அவர்கள் இருவரும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் பாராசூட் செயலிழந்ததற்கான காரணம் குறித்து லோஸ் வேகாஸ் பொலிஸார் மற்றும் சாகச விளையாட்டுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.