4 விமான விபத்துகளில் உயிர் தப்பிய இரண்டாம் உலகப் போர் வீரர் 103ம் வயதில் காலமானார்
இரண்டாம் உலகப் போரில் 19 ஆபத்தான போர் பறப்புகளை (missions) மேமற்கொண்டு, நான்கு முறை விமான விபத்தில் சிக்கியும் உயிர் தப்பிய கனடிய விமானப்படையின் சிரேஸ்ட விமானி ரெஜினால்ட் “க்ராஷ்” ஹாரிசன் (Reginald “Crash” Harrison) தனது 103 வயதில் காலமானார்.
அவர் எப்போதும் பொறுமையும், பெருமிதமும், மற்றவர்களைப் பற்றிய அக்கறையும் கொண்டவராக இருந்தார்.
தன்னைப் பற்றி ஒருபோதும் பேசிக்கொள்ள மாட்டார்” என்று அவரது நண்பர் பிரையன் ஸ்விட்ரோவிச் (Brian Swidrovich) கண்ணீருடன் நினைவு கூர்ந்தார்.

கனடியன் விமானப்படை
ரெஜினாவிலிருந்து 125 கி.மீ. தொலைவிலுள்ள பீசண்ட் ஃபோர்க்ஸ் (Pheasant Forks) பகுதியில் உள்ள பண்ணையில் வளர்ந்த ஹாரிசன், நிலம் உழும்போது வானில் பறக்கும் விமானங்களைப் பார்த்து ஈர்க்கப்பட்டார்.
1943 ஏப்ரலில், 20 வயதில் ராயல் கனடியன் விமானப்படையில் சேர்ந்து “விங்ஸ்” பெற்றார்.
பின்னர் இங்கிலாந்தின் க்ராஃப்ட் (Croft) தளத்துக்கு அனுப்பப்பட்டார். 1944 மார்ச்: பணியிலிருந்து தரையிறங்கியதும் தரையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து விமானம் தீப்பிடித்தது.ஹாரிசன் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்களில் மீண்டும் பறக்கத் தொடங்கினார்.
1944 ஜூலை: டேக்ஆஃப் சமயத்தில் ஒரு என்ஜின் பழுதடைந்து, விமானம் அருகிலுள்ள பண்ணையின் கல் சுவற்றில் மோதி வெடித்தது. மயக்க நிலையில் ஹாரிசனை இறக்கையில் இருந்து மீட்டனர். அப்போதுதான் அவருக்கு “க்ராஷ்” (Crash) என்ற புனைப்பெயர் வந்தது.
ஒரு மாதத்துக்குப் பிறகு: மோசமான வானிலை காரணமாக மாற்று விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட போதிலும், அந்தச் செய்தி ஹாரிசனின் குழுவுக்கு சென்று சேரவில்லை. எரிபொருள் தீர்ந்து என்ஜின் நின்றதும், அவர் குழுவினரை பாராசூட் மூலம் இறங்க உத்தரவிட்டார். அவர்கள் இங்கிலாந்தின் கம்பர்லேண்ட் மலைகளில் நடந்து சென்று ஒரு பண்ணை வீட்டை அடைந்தனர்.
1944 டிசம்பர்: அவ்ரோ லான்காஸ்டர் விமானத்தில் பறந்தபோது, நட்பு நாட்டுப் படைகளே தவறுதலாக சுட்டதில் விமானம் பாதிக்கப்பட்டது. இருப்பினும் அவர் பத்திரமாக கட்டாய தரையிறக்கம் (crash landing) செய்து குழுவினரை காப்பாற்றினார்.
“நான் மரணத்தை நான்கு முறை ஏமாற்றிவிட்டேன். ஐந்தாவது முறை உயிர் பிழைக்க மாட்டாய் என்று எனது கமாண்டிங் ஆஃபீசர் சொல்லி வீட்டுக்கு அனுப்பினார்” என்று ஹாரிசன் புன்னகையுடன் கூறியதை நண்பர் ஸ்விட்ரோவிச் நினைவு கூர்ந்தார்.