ரஷ்யா–உக்ரைன் போர் புதிய கட்டம் ; 10,000 வடகொரிய வீரர்கள் களத்தில்
ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான போர் பல வருடங்களாக நீடித்து வரும் நிலையில், தற்போது வடகொரிய இராணுவத்தினர் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்க்களத்தில் குதித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சுமார் 10,000 இற்கும் மேற்பட்ட வடகொரிய இராணுவத்தினர் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் யுக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போரின் போக்கை மாற்றியமைக்கக் கூடிய ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள நெருக்கமான பாதுகாப்பு உடன்படிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த இராணுவ உதவி பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, நவீன ஏவுகணை தொழில்நுட்பங்களுக்குப் பதிலாக வடகொரியா தனது வீரர்களை ரஷ்யாவிற்கு வழங்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும், இந்த மோதல் ஒரு 'உலகப் போராக' மாறுவதற்கான அறிகுறி எனவும் அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) நாடுகள் எச்சரித்துள்ளன.

தென்கொரியாவும் இந்த விடயத்தில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன், யுக்ரைனுக்கு நேரடியாக ஆயுத உதவிகளை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றது.
ஏற்கனவே ஆள் பற்றாக்குறையால் தவித்து வரும் ரஷ்ய இராணுவத்திற்கு வடகொரிய வீரர்களின் வருகை ஒரு புதிய பலத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், மொழிக் குறைபாடுகள் மற்றும் நவீன போர் முறைகளில் வடகொரிய வீரர்களுக்கு உள்ள அனுபவமின்மை சவாலாக அமையலாம் எனவும் இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.